Tuesday 18 October 2011

பேதை மதியும் மூடமதியும்



பல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு
கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த
நிலவு படுது கதைகளிலே படாத பாடு

வேடம் பூண்டு அமுதை உண்ட
ராகு கேதுவை காட்டிக் கொடுத்ததால்
விழுங்குது அவைகள் நிலவை
பாம்பாக வந்தென்று
சந்திர கிரகணம் வந்தபோது
காரணம் அன்று சொல்லப்பட்டது

ஆடிய பிள்ளையாரை
வேடிக்கை பார்த்து நகைத்ததால்
தேயுது நிலவு சாபங்கொண்டு
ஓடிய நிலவு பரமனை வேண்ட
பிறையாய் எடுத்தார்
சிரசில் வைத்தார் என்று
படித்தேன் பாடத்தில் - மனம்
பரிதாபப் பட்டது
நிலவுக்காய் அன்று

மூன்றாம் பிறையே சிவனின்
தலையிலே இருப்பது என எண்ணி
தேடித் தேடிப் பார்த்தேன் அதனை

அடுத்தவர் பிறையை வணங்கையிலே
அது இருக்கும் முடிக்குக் கீழ்த்தானே
ஈசன் முகமது  இருக்குதென நம்பி
சற்று கீழாக உற்று உற்று நோக்கினேன்

அறியாமல் என்றேனும்
நாலாம்பிறை பார்த்து விட்டால்
நாய்படாத பாட்டை
நானே தனியாய்ப் படுவதோ என்று
கூடவந்த நண்பர்களையும்
பார்க்கவைத்து திருப்தி கொண்டதுண்டு

பசியாய் இருக்கும் சமயங்களில்
பார்க்கும் நிலவில் அழகாய்
பாட்டி வடை சுட்டால்
நாக்கில் ஊறும் எச்சில்

பாட்டியும் வடையும் அல்லவது
பள்ளமும் மேடுமே என்று
அறிவதற்கே ஆயின பலகாலம்
விஞ்ஞானிகளாயும் ஆராச்சியாளர்களாயும்
பிறகெங்கே ஆவது நாங்கள்

அட்டமி நவமி தொட்டது நாசமென்றதால்
தள்ளிப் போயின பல காரியங்கள்
நல்ல நாள் பார்த்துப் பார்த்தே


அமெரிக்கன் காரன் அங்கே தன் கொடி நாட்டி
நிலவினை தான் உரிமை கொண்டாட
நாமோ அம்புலிக்கு மாமா முறை சொல்லி
உறவு கொண்டாடினோம்

அவனவன் விண்வெளிக்கு
ஓடம் விட்டுத் தேடிப்போய்
ஆராச்சி செய்து வர
நாங்கள்
நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடி வாவென
நோகாமல் கூப்பிட்டு நிலா தானாக வருமென
இருந்து விட்டோம் சிந்திக்காமல்

உள்ளதை உள்ளபடியே
உண்மையினை உண்மையாகவே
சின்ன வயதிலிருந்தே விதைத்திருந்தால்
வீணான கற்பனைகள் சேராது இருந்திருக்கும்
தெளிவான சிந்தனைகள் சிறப்பினை சேர்த்திருக்கும்

No comments:

Post a Comment