Sunday 27 October 2013

பெற்றவரே பேறு பெற்றவர்





உறுண்டு பிரண்டு படுத்தாலும் - எழுந்திட
உடல்நிலை இடம்கொடாது விடினும்
அடித்தெழுப்பும் அதிகாலையில் அலாரம்
துடித்தெழுவார் ஓடுவார் துன்புறும் தம்நிலை நோக்கார்

குளிரில் பனியில் காதும் மூக்கும் விறைக்க
கை இடுக்குகள் வெடித்து ரத்தம் சிதற
ஓடுவார் ஓடுவார் வேலையே வேலையென்று

நல்ல கனி தரும் சாறு வேண்டி
வல்லெனப் பிழிந்திடும் யந்திரமாய்
வல்லமையுள்ள வேலைத்தளங்கள்

செய்வேலைக்கேற்ற ஊதியமும்
வரிகளைக் கழித்தே வங்கிக்கு வரும்
செலவுக்கு வழிகோலும் அவசியத் தேவைகள்
மிச்சம் பிடிப்பர் சேமிப்பர் ஆயினும் இவர்

இளமைக்கால ஆசைகளெல்லாம்
கனவுகளேடு கரைந்துபோகும்
இரவுகளெல்லாம் இரண்டாவது
வேலையோடு முடிந்துபோகும்

ஊரிலிருந்து அழைப்பு வரும் பணம் வேண்டி
அனுப்பியே ஆகவேண்டும் கடன் வேண்டி
பெற்றவர் உற்றவர் கூடப்பிறந்தவர் உறவினர்கள்
தேவையெல்லாம் தீர்த்து வைப்பர் - இவர்
தம் தேவைகள் எதையும் தீர்த்து வைக்கார்
தமக்கென எதையும் சேர்த்தும் வைக்கார்

வட்டிக் கடனை முடிக்கும் முன்னே
விழுந்திடும் சொட்டை தலையின் மீதே
வயதும் எட்டிப் போய்விடும் இவர்க்கே - பின்பெங்கே
முட்டிமோதுவர் பெண்கள் மணம் முடிப்பதற்கே

அடுத்தவரை இன்புறச் செய்து வாழ்தலே மேலென்று
முடிந்தவரை தமை வருத்திடுவர் தேய்ந்திடுவர்
இவர் யாரென்று இன்னும் விளக்கிடவும் வேண்டுமா

புலம்பெயர் மண்ணிலே நிலைகுலையா நின்று
வாழ்வோடு போராடும் வல்லமைமிகு இளைஞர்கள்
தாமுருகி அடுத்தவர்க்கே ஒளிகொடுக்கும் ஏந்தல்கள்

இவரை பெற்றவரன்றோ பேறு பெற்றவர்
இவர்தமை பெற்றவரே பேறு பெற்றவர்.



No comments:

Post a Comment