Saturday 30 November 2013

சிரிப்பினில் எரித்தவள்







55 கிலோ எடையில் ஒரு பூ
ஆடையில் போனது வீதியில்
அந்த இடையோடு சேர்ந்து என்
உயிரும் போனது காணாமல்

திட்டான திடலான ஒழுங்கையில் போன
வண்டிலைப்போல் குலங்கியது என் இதயம்
வளைந்து ஓடிய மழை வெள்ளமென
நடந்து போகிறாள் நளினமாய்

என்னை விழுங்கிய அந்தப் பார்வையில் தான்
எத்தனை அர்த்தங்கள்
எத்தனை கண்களைக் கடந்திருக்கிறேன்
இது என்ன இப்படித் தின்கிறதே
அவளுக்குப் போட்ட பூசைக்கு
நான் தானா பலி

திரும்பிப் பார்த்தாள் தெறித்தது மின்னல்
தூக்கிப் போட்டாள் பின்னலைப் பின்னால்
வலித்திருக்குமோ முதுகு?
அவள் என்னை கடந்து போன அந்த கணத்தில்
உணர்ச்சி அற்றுப் போயிருந்தேன் பிணமாய்

நிலவு கூட அழகாய்த்தான் இருந்தது
அவள் முகத்தைப் பார்க்கும் வரை
எங்கோ அவளைப் பார்த்தது போலத்தான் இருக்கிறது
ஆனால் எந்தத் தோட்டத்தில் எந்தச் செடியில்
என்று தான் நினைவிலில்லை

சிரித்து விட்டுத்தான் போகிறாள்
என்று இருந்து விட்டேன்
பின்பு தான் புரிந்தது
என்னை எரித்து விட்டுப்
போனாள் என்று.



Wednesday 27 November 2013

மண்ணுக்கீந்த மாவீரர்கள்





மண் ஈன்ற மறவர்களே - உயிரை
மண்ணுக்கீந்த மா வீரர்களே
விடுதலையே மூச்சாகி வேங்கையெனப் பாய்ந்தவரே
எழுதுகோலில் அடங்கிடுமா உங்களின் தியாகமே

பெற்ற அன்னைக்கும் மேலாய் தமிழ் ஈழம் உமக்கே
சுற்றமும் துறந்தே மண் மீட்டிடச் சென்றீர்
எத்துனை இடர் வந்த போதும் சோராமல்
எம்மினத்தின் இருள் நீக்கச் சுடரானீர்

வெற்றிக்கு அடிப்படை ஆயுதமே என்றால்
எப்போதோ அழிந்திருக்கும் எம்மினமே அடியோடு
உங்களின் வீரமும் உள்ளத்து வலிமையுமே
இத்தனை காலமாய் தமிழ் ஈழத்தைத் தாங்குது

எடுத்து நசுக்கி எறிந்துவிடப் பேனல்லத் தமிழன்
ஏமாந்து இனியும் அடிமையாகப் பேயனல்லத் தமிழனென்று
கொடுத்த அடியினில் காட்டினீர் தமிழன் வீரத்தை
எதிரிக்கு மட்டுமல்ல உலகிற்கே எடுத்து

நீங்கள் துயில்கின்ற இல்லங்கள் - சீர் கொண்ட
எங்கள் தமிழ் ஈழத்து ஆலயங்கள்
உங்களின் ஈகம் போகாது வீணாய் - ஓர் நாள்
ஐ நா விலும் பறக்கும் ஈழக்கொடி தானாய்

இளமைக்கால ஆசைகளெல்லாம்
எமக்காய் துறந்து சென்றீரே – உமக்காய்
விளக்குகளை ஏற்றிவைத்து வணங்குகிறோம்
வெளிச்சமாய் இருந்தெமக்கு வெற்றிகளைக் காட்டும்

ஈழ நாட்டின் எல்லைக் கோடுகள்
வரையப் படுகின்றன உங்கள் குருதியிலே
வீரத்தோடு வீழ்ந்த வித்துக்களே
விடியும் உங்களால் இனி தமிழ் ஈழத்திலே

                    (2008 மாவீரர் தினத்திற்காக எழுதி லண்டன் தமிழ் வானெலியில்                                ஒலிபரப்பானது.)




Tuesday 26 November 2013

போடாத கடிதம்





என்னைக் காதலித்தவளுக்கு
என்னை மன்னிக்கச் சொல்லி
வருத்தமுடன்
எழுதிக் கொள்வது
உன்னை முன்பு
காதலித்து
பிறகு கைவிட்டவன்

ஆறாத காயங்களும்
மாறாத
அவமானங்களும்
என்னால் உனக்கு
ஏராளம்
தலையனைக்குள்
முகம் புதைத்து
நீ அழுத இரவுகளுக்கு
நானே தான் காரணம்

ஊர் குத்திய முட்களும்
நீ அழத பொழுதுகளும்
அறியாமற் போய்விட்டேன்
அன்று
அறிந்த போது கனக்கிறது
நெஞ்சு
சும்மா இருந்த உன்னை
காதலெனும் ஆசைகாட்டி
பாதி வழியில் கைவிட்டேன்
பாவி நானடி
வேறென்ன சொல்ல

அறிந்தே யாருக்கும்
துரோகங்கள் செய்ததில்லை
சத்தியமாய் சொல்கிறேன்
நான் வேண்டுமென்றே
செய்யவில்லை
உன்னைத்தான் காதலித்தேன்
உண்மையாயத் தான் காதலித்தேன்
கோபமும் பிடிவாதமும்
என்னையே மிஞ்சி விட்டன

என்னை வேண்டாமென்றே
இருந்திருப்பாய் என இருந்தேன்
அந்த நினைப்பில் தான்
உன்னையும் தூக்கி எறிந்தேன்
உன் காதலை நான்
உணர்வதற்கு தவறிவிட்டேன்

என்னால் நீ
அழுதவைகள்
உண்மையிலே எனக்குத்
தெரியாது
ஒரு கண்ணீரில்
காதலைத் தொடங்கி
உன்னைக் கண்ணீரிலேயே 
முடித்து விட்டேன்

உன்னை எனக்கு
உணர்த்தாமல் போனது
உன் குற்றமா
இல்லை
உன்னை உணர்வதற்குக் கூட
நினைக்காமல் போனது
என் குற்றமா
எனினும்
நீ இழைத்தது குற்றமெனில்
நான் புரிந்தது
துரோகம்

இத்தோடு என்னை
மன்னிப்பாய் என்பதற்காய்
எழுதவில்லை இதனை
உண்மை தெரிந்த பின்பும்
இதைக்கூட நான்
செய்யவில்லை எனன்றால்
என் மனமே
கொல்லும் என்னை

உன்னைப் பிரிந்ததினால்
இழப்பு எனக்கெனினும்
நல்லதோர் வாழ்க்கை
உனக்கமைந்து விட்டதில்
மகிழ்ச்சி

இத்துடன் இதனை முடிக்கின்றேன்
இன்னும்
உனக்கு
பழைய புண்ணை
கிளறிவிட ஆசையில்லை.



Monday 25 November 2013

காதல் கடந்த காலம்






அப்படியும் இப்படியுமாக்
காலங்கள் மாறியபோதும்
சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும்
செத்துவிடவில்லை எனக்குள்

வீணாய்ப் போன உன்னை காதலித்து
காணாமல் போன என் கற்பனைகள் கோடானுகோடி
நோகாமல் சொல்லிச் சென்றாயே
'நீ யாரோ நான் யாரோ'

கரைக்கு அடித்துக் கலைத்த போதும்
அலை கடலைத்தேடி திரும்ப ஓடும்
என்னை வெறுத்து நீ ஒதுக்கிய போதும்
உன் நினைவுகள் மீண்டும் வந்தே வதைக்கும்

நீ தந்தது தானே என்று
சோகத்தையும் சுகமாய் ஏற்றுக்கொண்டேன்
ஆறுதலாய் ஆயிரம் இருந்தாலும்
ஏனோ இன்னும் ஏக்கத்திலே வாழ்கின்றேன்

உன்னோடு நான் சேராத போதும்
என் காதல் தெய்வீகமானது
உன்னோடு நான் சேராததால் தான்
தெய்வங்களே வீணானது

என் காதலில் என்னை தோற்கடித்து
அப்படி என்னத்தை நீ கண்டாயோ
உதாசீனப் படுத்தியது சரியா என்று
நிதர்சனமாய் நீயும் உணர்ந்திருப்பாய் இன்று

உனக்காய் எழுதிய கவிதைகள் துணையாக
இருக்கிறேன் இன்னும் உயிரோடு தனியாக
அடிக்கடி உன்னை நினைப்பதால் தானோ
துடிக்குது இன்னும் எனக்குள்ளே ஏதோ....





Saturday 23 November 2013

முரண்பாடு






ஒருவன் ஒருத்தியை பார்த்தபோது

அலையெனக் காற்றில் தவழும் குழலும்
கலைமகள் வடிவெனக் கண்ட முகமும்
சிலைவடித் தவரின் கருத்தில் முளைத்த
விலையில்லாச் செல்வம் வேல்விழியாள் அழகே

கொடியிடையாள் எனவுரைக்க இடைபோலொரு கொடியில்லை
நெடுவளர் கருங்கூந்தல் போலொரு மேகமில்லை
முகிலிடை நீந்தும் முழுமதியும் ஈடில்லை
எகிநடைக் கன்னி வனப்பிற்கு இணையில்லை

அதே ஒருவன் அதே ஒருத்தியை பார்த்து; சில காலம் கழித்து

கருத்த உருவத்தை காகமெனக் கொண்டேன்
சிரித்து பல்காட்ட முகமெனத் தெளிந்தேன்
விரித்த கூந்தலில் நரைமுடிகள் தெரிய
பருத்த தேகத்தில் பாகமெது அறியேன்

கசங்கிய காகிதத்தில் கிறுக்கல்கள் போல
நசுங்கிய முகத்தில் சுருக்கங்கள் நிறைய
முந்தய வாழ்கையில் வந்தவள் இவளா
விந்தையா விதி கவினை வென்றதா?




Friday 1 November 2013

சொன்னது சரிதானா?





பாரதி யார்?

தமிழ் கூறும் நல்லுலகே
பெருங்கவியென்று கொண்டாடும் பாரதியே
நாட்டுக்கும் நங்கையர்க்கும் விடுதலை கேட்டு
பாட்டுப் பாட்டாய் முழங்கியவரே

வரலாறு என்றொரு பாடமே
இருக்கவில்லையா  
நீங்கள் படித்த காலத்தில்
இல்லை
பொது அறிவே பஞ்சமா உங்களுக்கு

இலங்கையென்னும் தீவினிலே
ஈழத்தமிழ் இனமென்று
இனமான உணர்வு கொண்ட
தமிழ்க்குடி ஒன்று இருக்குதையா

இது கீர்த்தி கொண்ட ஆண்ட பரம்பரை
வீரமும் தியாகமும் இதன் வரலாறு

செந்தமிழ் நாடென்று சொன்னாலே
தேன் வந்து பாயுமாமே உங்கள் காதில்

தமிழனுக்கோர் நாடுவேண்டி
தன்னுயிரை ஈகம் செய்யும்
மறத்தமிழினம் இத்தீவில்
இன்று நேற்று வந்ததல்ல

சிங்களத் தீவினிற்கோர் பாலமமைப்போமென
எங்கணம் நீங்கள் சொல்லலாம்
சிங்களப் பேரினவாதிகளுக்கு முன்னதாகவே
இலங்கையை சிங்களத் தீவென்று நீங்களும்
சென்னது சரிதானா

எங்கள் இனத்தையே இழிவு செய்த
மமதைக்காரர் உங்களைப்போய்
மகாகவி என்று நாமும்
சொல்வதும் சரிதானா?